
விழுப்புரம்
விழுப்புரத்தில் உள்ள ஏழு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு நிலுவைத் தொகையான ரூ.410 கோடியை தராமல் நான்கு வருடங்களாக அலைக்கழித்து வருவதால் அதனை பெற்றுத் தர சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மதியழகன், மணி உள்ளிட்டோர் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "தமிழக அரசு 2013-14-ல் கரும்புக்கு பரிந்துரை விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2550-ம், 2014 - 15-ல் ரூ.2550-ம், 2015-16-ஆம் ஆண்டுக்கு ரூ.2750 எனவும் அறிவித்தது.
அரசு அறிவித்த விலையை வழங்காமல், திருக்கோவிலூரில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலையான பண்ணாரி அம்மன் ஆலை 2014-ஆம் ஆண்டில் டன்னுக்கு ரூ.300 வீதம் ரூ.13.66 கோடி பாக்கி வைத்துள்ளனர்.
2015-ல் ரூ.8.55 கோடியும், 2016-ல் டன்னுக்கு ரூ.450 வீதம் ரூ.20.75 கோடியும், 2017-ல் டன்னுக்கு ரூ.375 வீதம் ரூ.19.09 கோடியும் என்று, கடந்த நான்கு ஆண்டுகளாக மொத்தம் ரூ.62 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளனர்.
இதேபோல, கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையான தரணி ஆலை 2013-14 ஆம் ஆண்டில் அரசு அறிவித்த விலைப்படி ரூ.16.81 கோடியும், 2014-15 ஆம் ஆண்டு ரூ.15.85 கோடியும், 2015-16 ஆம் ஆண்டு ரூ.26 கோடியும், 2016-17ஆம் ஆண்டு ரூ.19.96 கோடியும் என்று, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.78.62 கோடி நிலுவை வைத்துள்ளது.
கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாகங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி கரும்பை வெட்டி அனுப்பி வைத்து வருகின்றனர். விவசாயிகள் தனது சொந்த செலவில் பயிரிட்டு ஏற்றி அனுப்பிய கரும்புக்கு, அரசு விதிகள்படி கரும்பு அனுப்பிய மூன்று மாதங்களுக்குள் உரிய விலையை வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கூடுதல் தொகையை வழங்காமல் நிலுவை வைத்து விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விவசாயிகளுடன் புகார் மனு அளிக்க வந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கூறியது:
"தமிழக அரசு ஆண்டுதோறும் கரும்புக்கான ஆதார விலையை அறிவித்து வருகிறது. இதை வழங்க வேண்டிய ஆலை நிர்வாகங்கள், உரிய தொகையை வழங்காமல் நிலுவை வைத்து வருகிறது.
2013-ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள 24 தனியார் ஆலைகளில், அரசு அறிவித்த ஆதார விலைக்கான நிலுவை ரூ. 1400 கோடி உள்ளது. 13 கூட்டுறவு ஆலைகளில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்க வேண்டிய ரூ.220 கோடி வழங்கப்படாமல் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 தனியார் ஆலைகள், மூன்று கூட்டுறவு ஆலைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.410 கோடி நிலுவை உள்ளது.
இதுகுறித்து, ஆலை நிர்வாகங்களிடம் விவசாயிகள் பலமுறை நேரில் கேட்டும், போராட்டங்கள் நடத்தியும் நிலுவைத் தொகை வழங்கியபாடில்லை.
இந்த ஆண்டு நிறைவுக்குள்ளாவது, ஆலை நிர்வாகங்கள் நிலுவைத் தொகையை வழங்க, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளித்துள்ளோம். தொடர்ந்து ஆலை நிர்வாகங்களையும் வலியுறுத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
மாநிலப் பொருளாளர் எம்.சின்னப்பா, மாவட்டத் தலைவர் தாண்டவராயன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.