Azhi Therottam: புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம்.. காலை 8.10 மணிக்கு வடம்பிடிப்பு..2000 போலீசார் பாதுகாப்பு..

Published : Mar 14, 2022, 09:03 PM IST
Azhi Therottam: புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம்.. காலை 8.10 மணிக்கு வடம்பிடிப்பு..2000 போலீசார் பாதுகாப்பு..

சுருக்கம்

உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளதால், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளதால், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

திருவாரூர் தியாகராஜர் கோவில்:

சைவ தலங்களில் மிகவும் பழமையான கோவில் திருவாரூர் தியாகராஜர் கோவில். இங்கு திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இதுப்போன்ற பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. இந்த விழாவில் உள்ளூர், வெளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் வருகை புரியும். 

ஆழித்தேர்:

இக்கோவில் தேரானது,  ஆழித்தேர் என்று அழைக்கப்படுவதோடு, ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையும் இதற்கு உண்டு. அலங்கரிக்கப்படாத நிலையில் இந்த தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடி ஆகும். தேரின் விமான பகுதி வரை சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி என மொத்தம் 96 அடி உயரத்துடன் ஆழித்தேர் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். 

அலங்கரிக்கப்பட்ட தேர்:

இந்த பிரம்மாண்டமான தேரின் மொத்த எடை 300 டன்னாகும். இதில் மரத்தேரின் எடை மட்டும் 220 டன் ஆகும் . இதன் மீது பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் ½ டன், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் மொத்த எடை 300 டன்னாகும்.

மேலும் இந்த தேரை இழுப்பதற்கு 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன் இருக்கும். திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் ஆழித்தேரோட்ட விழா திருவாரூரில் விமரிசையாக கொண்டாடப்படும். அதனால் திருவாரூர் முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
 
ஆழித்தேரோட்டம்:

இந்த சிறப்புமிக்க ஆழித்தேராட்டம் நாளை நடைபெறுகிறது. முன்னதாக நாளை காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் இழுக்கப்படும். அதனை தொடர்ந்து 8.10 மணிக்கு உலக புகழ்பெற்ற ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்ட விழா தொடங்கி வைக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் அரசின் இதர துறையினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

2000 போலீசார் பாதுகாப்பு:

திருவாருர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு, 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படவுள்ளனர் என்று அம்மாவட்ட ஆட்சியர் காய்த்ரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த திருவிழாவையொட்டி மருத்துவக்குழு, தீயணைப்பு வாகனம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?