
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெறும் இடைதேர்தலில் கள்ள வாக்களிக்க டோக்கன் அளித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், பணபட்டுவாடா செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே இறந்துவிட்டார்.
இதனால், இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைதேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. பின்னர், புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இந்த நான்கு தொகுதிகளுக்கும் இன்று இடைதேர்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தென்பழஞ்சியில் கள்ள ஓட்டு போடா டோக்கன் அளித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், நெல்லித்தோப்பு தொகுதியில் வாக்களர்களுக்கு 5000 கூப்பன் அளித்த வேதகிரி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவருடன் வந்த மற்றொரு நபர் தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.