
அங்கீகாரமற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து வழக்கறிஞர் பட்டம் பெறாமல், 21 ஆண்டுகளாக ‘மாஜிஸ்திரேட்’டாக பணியாற்றியவரை தமிழக, புதுச்சேரி பார் கவுன்சில் கண்டுபிடித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்து வழக்கறிஞர்கள் தொழில் செய்துவருபவர்களின் ஆவணங்களை, சான்றிதழை சரிபார்க்க தமிழகம், புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, தமிழக, புதுச்சேரி பார்கவுன்சிலில் 90 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 56 ஆயிரம் பேர் மட்டுமே ஆவணங்களையும், சான்றிதழ்களையும் தாக்கல் செய்தனர்.
சான்றிதழ்களை சரிபார்த்ததில் 4 ஆயிரம் பேரிடம் முறையான பதில் இல்லை, 2 ஆயிரம் பேர் போலி வழக்கறிஞர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 742 பேரிடம் முறையான ஆவணங்கள், சான்றிதழ்கள் இல்லை எனக்கூறி அவர்கள் வழக்கறிஞர்கள் தொழில்செய்ய தடைவிதிக்கப்பட்டது.
இதில் அங்கீகாரமில்லாத சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று, பட்டம் பெற்று, 21 ஆண்டுகளாக மாஜிஸ்திரேட்டாக பணி புரிந்து ஓய்வு பெற்றவரை பார்கவுன்சில் நிர்வாகிகள் கண்டுபிடித்தனர்.
மதுரை உலகநேரியைச் சேர்ந்த பி. நடராஜன் என்பவரே மாஜிஸ்திரேட்டாக கடந்த 21 ஆண்டுகளாக மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி கடந்த 2003ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் 25 ஆண்டுகள் சட்டத்துறை பணியை போலியான கல்லூரியின் பட்டத்தோடு நிறைவு செய்துள்ளார்.
இது குறித்து நடராஜனிடம் விளக்கம் கேட்டு தமிழக பார்கவுன்சில் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், “ 21 ஆண்டுகளாக மாஜிஸ்திரேட்டாகவும், 25 ஆண்டுகள் சட்டத்துறையிலும் பணியாற்றிய என்னை, என் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்வது நியாமற்றது.
கர்நாடக மாநிலம், மைசூர் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்ற சாரதா சட்டக்கல்லூரியில் கடந்த 1975-78ம் ஆண்டில் பி.ஜி.எல். பட்டம் பெற்றேன். 2 ஆண்டுகள் தொலைநிலைக்கல்லியில் படித்தநான், வெற்றிகரமாக முடித்தேன்.
எனது பட்டம் கல்விசார்ந்த விஷயங்களுக்காத்தான், பணிக்காக இல்லை என்று பார்கவுன்சில் அதிகாரிகளிடம்அப்போது நான் கூறவில்லை. கடந்த 1982ம் ஆண்டு பிப்ரவரி 15ந்தேதி மாஜிஸ்திரேட்டாகவும், பணியில் சேர்ந்து அமைதியாகப் பணியாற்றி கடந்த 2003ம் ஆண்டு ஜுன் 30ந்தேதி ஓய்வு பெற்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நடராஜன் ஓய்வு பெற்ற ஒருமாதத்துக்குள் தமிழக, புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, எம்.எஸ்.1739/2003 என்று பதிவு எண்ணும் பெற்றுள்ளார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏன் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்யக்கூடாது என்று மீண்டும் பார்கவுன்சில் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.