கடைகளில் காலவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப்பொருட்கள்…

First Published Oct 9, 2016, 2:56 AM IST
Highlights


அந்தியூர் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப்பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்தியூரில் உள்ள சுகாதார துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்தியூர் வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் ரமேஷ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, கிருபைநாதன், லோகநாதன் மற்றும் அதிகாரிகள் பலர் அந்தியூர், தவுட்டுப்பாளையம், அத்தாணி, பர்கூர், சின்னதம்பிபாளையம், புதுப்பாளையம், அண்ணாமடுவு ஆகிய பகுதிகளில் உள்ள 150–க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள பெட்டிக்கடைகள், பேக்கரி கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் காலாவதியான குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், குழந்தைகள் சாப்பிடக்கூடிய சாக்லெட்டுகள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அதனை அந்தியூர் அருகே உள்ள ஓடை பகுதிக்கு கொண்டு சென்று அழித்தனர். அழிக்கப்பட்ட காலாவதியான பொருட்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும்.

மேலும் பல கடைகளில் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை படங்கள் இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 பாக்கெட் சிகரெட்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்ததுடன், அந்த சிகரெட்டுகளை ஆய்வக சோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பள்ளிக்கூடங்களில் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட்டுகள் விற்கக்கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

அதுமட்டுமின்றி அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் பொது இடங்களில் புகைப்பிடித்து கொண்டிருந்த 25 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகளின் அதிரடி சோதனை நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

click me!