எண்ணூர் அமோனியா வாயு கசிவு: அண்ணாமலை வருத்தம்!

Published : Dec 27, 2023, 03:12 PM IST
எண்ணூர் அமோனியா வாயு கசிவு: அண்ணாமலை வருத்தம்!

சுருக்கம்

எண்ணூர் அமோனியா வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து உள்ளூர் மக்களே சக மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆலையை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ள தமிழக அரசு, ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரத்தை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், எண்ணூரிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

2024 மக்களவை தேர்தல்: விளம்பர நிறுவனங்களின் உதவியை நாடும் அரசியல் கட்சிகள்!

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை எண்ணூர் அருகே அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், திரவ அமோனியா குழாயில் கசிவு ஏற்பட்டதால், எண்ணூர் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமப் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 

 

 

பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. பொதுமக்கள் அனைவருக்குமே தகுந்த மருத்துவ சோதனைகள் நடத்தி, அவர்கள் உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், எண்ணூரிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க, தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!