
நாமக்கல்,
அரசு பேருந்து மோதி கணவன், மனைவி இறந்ததில், நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டும் ஐந்து ஆண்டுகளாக நஷ்ட ஈடு தராமல் ஏமாற்றிவந்த அரசு பேருந்தை நீதிமன்றம் உத்தரவின்படி பறிமுதல் செய்தனர்.
இராசிபுரம் அருகே உள்ள பொன்குறிச்சி மேல்கல்லுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் இராமகிருஷ்ணன் (26), இவர் ஒரு கட்டிட தொழிலாளி.
இவர் கடந்த 2011–ஆம் ஆண்டு செப்டம்பர் மர்தம் 12–ஆம் தேதி நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் பகுதியில் தனது மனைவி அம்சவள்ளியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற கோவை கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்து இராமகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயம் அடைந்த இராமகிருஷ்ணன் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி அம்சவள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இறந்த கணவன் – மனைவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது.
இதில் இராமகிருஷ்ணனின் குடும்பத்தாருக்கு கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.5ஈலட்சத்து 85 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கடந்த 2012–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26–ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈட்டை வழங்காமல் இழுத்தடித்தது. இதனையடுத்து இராமகிருஷ்ணனின் குடும்பத்தார் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி இளவழகன், கோவை அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து நேற்று நாமக்கல்லில் இருந்து கோவைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அரசு பேருந்து நீதிமன்ற அமீனா முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.