
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய – இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்து விடுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இரு தரப்பினரிடையே பேச்ச வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..
இலங்கை அரசின் வசமுள்ள 140 படகுகளையும், 54 மீனவர்களையும் மீட்க தேவையான நடவடிக்கை வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இலங்கை அரசு விடுவிப்பதாக ஒப்புக்கொண்ட 61 படகுகளில் 36 படகுகள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.