
மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்களிடம் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க, அங்குள்ள ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால், கையில் உள்ள பணத்தை மாற்ற முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை கடையில் வாங்க முடியாமலும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களான மின்வாரிய அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்பட பல்வேறு அலுவலகங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என அரசு உத்தரவிட்டது.
மேலும் பெட்ரோல் பங்க், மருத்துவமனை, பால் கொள்முதல் நிலையம் ஆகியவற்றிலும், இந்த பணத்தை 24ம் தேதி வரை வாங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சில இடங்களில் மட்டும் பணம் பெறப்படுகிறது. பல அலுவலகங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதில்லை என போர்ட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில், மின்வாரிய அலுவலகங்களில் செயல்பட்டும், மின் கட்டண மையங்களில், பழைய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு அங்குள்ள ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். மின் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டாலும், ஊழியர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, பணத்தை வாங்குவதற்கு மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு மாற்றும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்த அடுத்த நாள் முதலே, நுகர்வோர் நலன் கருதி, அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்தவும், கூடுதல் அவகாசமும் வழங்கப்பட்டது.
வரும், 24ம் தேதி வரை, மின் கட்டண மையங்களில், பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என அங்குள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பழைய நோட்டுகளை வாங்கவில்லை என பலரும் கூறுகின்றனர். இதுபற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. அப்படி புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.