பட்டின பிரவேசத்திற்கு அரசு அனுமதி...! கேலி செய்யும் மதுரை ஆதினம்..வேதனையில் கி.வீரமணி..

By Ajmal KhanFirst Published May 10, 2022, 8:14 AM IST
Highlights

தர்மபுர ஆதினம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி மறுத்த நிலையில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதனையடுத்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு  தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளதற்கு  திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பட்டின பிரவேசத்திற்கு கி.வீரமணி எதிர்ப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் குரு பூஜையையொட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெற உள்ள பட்டனப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்வார்கள், மனிதனை மனிதன் தூக்க அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர்.  இதன்பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்கள் ப்பட்டின பிரவேச நிகழ்விற்கு முதல்வர் அனுமதி அளித்ததாக தெரிவித்து இருந்தனர்.

பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி

இதனை கொண்டாடும் வகையில் மதுரை ஆதினம் 93 வது மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரியர் ஆதின மடத்தின் வெளியே மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர்,  பட்டின பிரதேசம் நடத்துவது குறித்து என்னுடைய கோரிக்கையை வைத்திருந்தேன்.அதனை ஏற்ற முதல்வருக்கும், அறநிலைத்து துறை  அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.  மேலும் முதல்வர் அனைத்து சமூகத்தையும் அரவணைத்துப் போக வேண்டும் என கேட்டுக்கொண்டார். பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மதுரை ஆதினத்தின் இந்த தகவலால் வேதனை அடைந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், தருமபுரம் ஆதினத்தின் பண்டார சன்னதி மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பவனி வருவதற்கு அனுமதி அளித்திருப்பது மனித உரிமைக்கும், நாகரிகத்திற்கும் உகந்ததல்ல - இனியாவது குறைந்தபட்சம் இதுபோன்ற மனித உரிமை மீறலை - அநாகரிகச் செயலை தடை செய்ய பொதுவாக ஆணை ஒன்றைத் தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

கேலி செய்த மதுரை ஆதினம்- வேதனையில் கி.வீரமணி

பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவார்கள் என  எதிர்பார்க்கவில்லை.ஆன்மிகம் என்பதைவிட இதன் பின்னணியில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். என்ற அரசியல் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. தங்களுக்கான வெற்றி என்று துள்ளிக் குதிப்பார்கள்; மதவெறி காவி சக்திகளும் மகிழ்வார்கள், முற்போக்காளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் தமிழ்நாடு அரசின் பின்வாங்குதல் - இந்த பல்லக்குப் பிரச்சினையில் ஒரு தோல்வி என்று ஊடகங்கள் சித்தரிக்கக் கூடும். எப்போதுமே சமூகநீதிக்கான, மனித உரிமைப் போராட்டங்கள் உடனடியாக வெற்றியை தந்ததாக வரலாறு இல்லாவிட்டாலும், இறுதியில் சிரிப்பவர்கள் பகுத்தறிவாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அது ஒரு புறமிருக்கட்டும். நமக்குள்ள ஆதங்கம் எல்லாம், தி.மு.க. ஆட்சிக்கு இப்படி ஒரு பின்னடைவை - களங்கத்தை - இந்தத் தடுமாற்ற முடிவு உருவாக்கிவிட்டதே என்பதுதான்! மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது. எனக்கூறியுள்ளார். மதுரை ஆதின கர்த்தர் என்னைக் கேலி செய்வதாக நினைத்து, பல்லக்கை மனிதர்கள் சுமப்பது அநாகரிகம்; மனித உரிமை பறிப்புக் கூடாது என்ற அத்துணை முற்போக்கான தலைவர்களை, சிந்தனையாளர்களைச் கேலி செய்துள்ளார். உலகம் முழுவதும் இது விளம்பரப்படுத்தப்பட்டதாம் என்று கூறுகிறார். உலகம் முழுவதும் அந்த அநாகரிகமான, மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதைக் கண்டு இப்படி இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பழைய மனித அநாகரிகங்களா? என்றுதான் முகம் சுளிப்பார்கள் - சிரிப்பார்கள் என்பதை பக்குவமடையாத பண்டார சந்நியாசி  புரிந்துகொள்ள சக்தியற்ற பரிதாபத்திற்குரியவர் ஆவார்! என அந்த அறிக்கையில் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
 

click me!