"வரதட்சணை கேட்டு பெண் அடித்துக்கொலை" - டாக்டர் குடும்பம் கைது!

First Published Jul 19, 2017, 5:50 PM IST
Highlights
doctor family arrested for dowry murder


வரதட்சணை கேட்டு மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் டாக்டர் மற்றும் அவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த டாக்டர் இளஞ்சேரன். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 100 சவரன் நகையுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், சீர்வரிசையாக அரைகிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை டாக்டர் இளஞ்சேரனுக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், இளஞ்சேரனின் குடும்பத்தாரோ, கூடுதலாக வரதட்சணை கேட்டு திவ்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இளஞ்சேரன் மருத்துவமனைக்கு சென்று விட, அவரது பெற்றோர் உறவினர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. திவ்யா தனது இரண்டரை வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டிற்கு திரும்பிய இளஞ்சேரனின் பெற்றோர், திவ்யா மயங்கிய நிலையில் இருந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்த போலீசார், திவ்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, திவ்யாவின் முகத்தில் இரத்த காயங்கள் இருந்ததைப் பார்த்த உறவினர்கள் திவ்யாவை கூடுதல் வரதட்சணை கேட்டு இளஞ்சேரனின் பெற்றோர் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, போலீசார் இளஞ்சேரனின் பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது, இளஞ்சேரன் மற்றும் அவரது பெற்றோர் அடித்து துன்புறுத்தியதால் திவ்யா மயங்கி விழுந்து மரணம் அடைந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுததி 15 நாட்கள் காவலில் திருச்சி சிறையில் அடைத்தனர்.

click me!