வீடு, தோட்டம் எல்லாத்தையும் இழந்துட்டு என்ன பண்ணபோறோம்னு தெரியல! 8 வழி சாலையை எண்ணி கதறும் பெண்...

Asianet News Tamil  
Published : Jun 21, 2018, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
வீடு, தோட்டம் எல்லாத்தையும் இழந்துட்டு என்ன பண்ணபோறோம்னு தெரியல! 8 வழி சாலையை எண்ணி கதறும் பெண்...

சுருக்கம்

do not know what to do after lost our house garden and land

சேலம்  

சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கு வீடு, தோட்டம், கிணறு, நிலம் எல்லாத்தையும் கொடுத்துட்டு என்ன செய்ய போறோம் என்று நிலத்தை இழக்கபோகும் பெண் கதறி அழுதார்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது தமிழக அரசு. 

இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நிலத்தை கையகப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. 

நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடு பணியையும் அரசு தொடங்கியுள்ளது. இந்த சாலைத் திட்டத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள், எட்டு மலைகள் உடைக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் வளைத்து வளைத்து கைது செய்தும் வருகிறது.

இந்த நிலையில் சேலம் - தர்மபுரி மாவட்ட எல்லையான மஞ்சவாடியில் இருந்து சேலம்  அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி வரை இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விவசாய நிலங்களில் எல்லைக் கல் ஊன்றி அளவீடு செய்யும் பணியில் கடந்த 18-ஆம் தேதி முதல் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கும் விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திட்டமே வேண்டாம் என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர்த்து வரும் வேளையில் நில அளவீடு செய்ய அதிகாரிகள் வந்திருந்தனர்.

இந்த நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இரண்டு நாட்களாக காவல் பாதுகாப்புடன் இந்த பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக குப்பனூர் ஊராட்சி சீரிக்காடு பகுதியில் இருந்து நில எடுப்பு தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். 

இதனையொட்டி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு தலைமையில், வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகநாதன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

நில அளவீடு செய்ய வெள்ளியம்பட்டியில் நில அளவீடு செய்து ராமசாமி, நைனாமலை ஆகியோரின் தோட்டத்தில் எல்லைக் கல் நடப்பட்டது. இவர்கள் இருவரும் அண்ணன், தம்பி ஆவார்கள். எல்லைக் கல் நடப்பட்டவுடன் ராமசாமியின் மனைவி பச்சியம்மாள் நில எடுப்பு தாசில்தார் அன்புக்கரசியிடம் கதறி அழுதார். 

அப்போது அவர், "எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 3½ ஏக்கரும், நாங்கள் குடியிருக்கும் வீடு, கிணறும் பசுமைச் சாலையால் இழக்க போகிறோம். இங்கு கடந்த 50 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விவசாயம் மட்டுமே செய்து வருகிறோம். இதற்கு மேல் என்ன செய்ய போகிறோம்? என்று தெரியவில்லை" என்றுக் கூறி கதறி அழுதார்.

அந்தப் பெண்ணிடம் தாசில்தார் அன்புக்கரசி, "நிலம் எடுப்பின்போது உங்களது வீடு, கிணறு, தென்னை மரங்கள், நிலங்கள் ஆகியவற்றுக்கு இழப்பீடு தரப்படும். அடுத்த மாதம் 6-ஆம் தேதி இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நடைபெறும்.  அப்போது நீங்கள் உங்கள் கோரிக்கை குறித்து முறையிடலாம்" என்று கூறினார்.

பின்னர், முருகன் என்ற விவசாயியின் தோட்டத்திற்குள் சென்ற அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயி முருகன், "என்னிடம் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 4 ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்கள், நெல் சாகுபடி செய்து வருகிறேன். இப்போது 8 வழிச்சாலைக்காக நில அளவீடு செய்து எல்லைக்கல் போடப்பட்டதில் 2 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

இந்த 2 ஏக்கரில் 150-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இருக்கிறது. தோட்டத்தின் நடுவே இந்த சாலை செல்கிறது. சாலையின் இரு பக்கமும் எனது மீதி நிலம் உள்ளது. இதனால் தோட்டத்திற்கு செல்லவும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சவும் முடியாது. 

அதனால் 8 வழிச்சாலையை தள்ளி போட வேண்டும். இல்லையென்றால் எனது நிலத்தை எல்லாம் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காவலாளர்கள் வந்து அவரை அப்புறப்படுத்தினர். 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!