
திருச்சி
திருச்சி மத்தியச் சிறையில் கைதிகளின் அறைகளில் கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்தியச் சிறையில் 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தக் கைதிகளை வழக்குத் தொடர்பாக அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது வழக்கம்.
இந்த நிலையில், திருச்சி சிறையிலிருந்த நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்த அப்பு (எ) செல்வம் (25), சத்யராஜ் (30), நாகப்பட்டினம் மேல்கரையைச் சேர்ந்த ஐயப்பன் (33) ஆகிய மூன்று கைதிகளையும் வழக்குத் தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டு திரும்ப அழைத்து வந்தனர்.
சிறை வாயிலில் சிறைக் காவலர்கள் கைதிகள் மூவரையும் சோதனை செய்துவிட்டு சிறைக்குள் அடைத்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் சிறைக்காவலர்கள் கைதிகளின் அறையில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து சிறிய அளவிலான கஞ்சா பொட்டலங்களும், போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டு அவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறைக் கைதிகளின் அறைகளில் கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகள் எப்படி வந்தது என்று சிறை வார்டன் (பொறுப்பு) ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.