இரண்டாவது நாளாக அவதி - சம்பளப்பணத்தை எடுக்க அலையும் ஊழியர்கள்

First Published Dec 2, 2016, 10:13 AM IST
Highlights


தமிழக அரசு ஊழியர்களுக்கு நேற்று முன் தினம்  தவணை முறையில் ஊதியம் வழங்கப்பட்டது. வங்கியில் ஏற்பட்ட  பணத்தட்டுப்பாடே இதற்கு காரணம். இதனால் பணம் எடுக்க முடியாமல் அரசு ஊழியர்கள் தவித்தனர். 

இரண்டாவது நாளாக இது நீடிக்கிறது , இதனால் வங்கி அதிகாரிகளுடன் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இப்படி அறிவித்ததாலும் வங்கிகளி்ல் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகள் விதித்ததாலும் பொதுமக்கள்மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

 அரசு அறிவித்தபடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடிந்தது. அந்தப் பணத்துக்கு சில்லரைகிடைக்காததால் அதுவும் செல்லாத நோட்டு போலவே ஆகி விட்டது .

எந்தக்கடையில் கொடுத்தாலும்’ சில்லரை இல்லை என்று கைவிரிக்கிறார்கள். புதிய 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்துக்கு வந்துவிட்டதாக கூறினாலும் கிடைத்தபாடில்லை. ஒரு சில ஏடிஎம்களில் அத்திபூத்தாற்போல 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன அதுவும் அரை மணி நேரத்துக்குள் தீர்ந்து விடுகிறது. 

கடந்த10ம் தேதியில் இருந்து 20 நாட்களாக மக்கள் இப்படித்தான் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த மாத சம்பளத்தை ரொக்கமாக தரவேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்த போதிலும் அதற்கு மத்தியஅரசும் ரிசர்வ் வங்கியும் ஏற்பாடு செய்யவில்லை.

இந்த நிலையில் மாதக்கடைசி நாளான 30 அன்று  சம்பளம் கிடைக்கும் என்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஏங்கிக் கிடந்தனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு வங்கிகள் மூலம் தான் சம்பளம் என்பதால் அவரவர் வங்கி கணக்கில் சம்பளப் பணம் வரவு வைக்கப்பட்டது.

 பணம் எடுப்பதற்காகவே  ஊழியர்கள் பலர் நேற்று ஒருநாள் விடுமுறை எடுத்தனர்.ஆனால் நீண்ட கியூவில் நின்ற போதிலும் பல வங்கிகளில் பணம் இல்லை என்றே பதில் வந்தது.பணம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். 

தமிழக அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரொக்கமாக ரூ.3000 வழங்கப்பட்டது ஒரு 2000 ரூபாய் நோட்டும், பத்து 100 ரூபாய்  நோட்டும் வழங்கப்பட்டது. எஞ்சிய பணம் அவர்களது  வங்கி கணக்கில்  சேர்க்கப்பட்டது. அவர்களுக்கு அன்றாட வசூல்பணம் கையில் இருந்ததால் சில்லரையாக பணம் தருவதில் சிக்கல் இல்லை. 

அரசு ஊழியர்கள் அனைவரும் வங்கிகளுக்கு படையெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு வெறும் 10ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்று வங்கி மேலாளர்கள் கூறி விட்டனர். இதனால் வங்கி ஊழியர்களுடன் அரசு ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். 

கடந்த இரண்டு நாட்களாக கையில் ரூ.2000 த்தை வைத்துகொண்டு எதுவும் செய்ய முடியாதபடி விழித்துகொண்டு நிற்கின்றனர். ஏடிஎம்களில் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் கியூவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அப்படியே நின்று பணம் எடுக்க போனாலும் வெறும் ரூ.2000 ரூபாய் தாள் வருகிறது.500 ரூபாய் தட்டுப்பாட்டால் அதையும் மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பளப்பணம் வங்கியில் இருந்து எந்த உபயோகமும் இல்லாத நிலையில் செம கடுப்பில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளனர்.

click me!