
சென்னையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டு ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 4 மாதத்துக்குள் 28 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் ரெயிலில் அடிபட்டு 248 பேர் இறந்தநிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் 329 பேர் பலியாகியுள்ளனர் என்று ரெயில்வே போலீசார்(ஜி.ஆர்.பி.) தெரிவிக்கின்றனர்.
அதாவது, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, சென்ட்ரல், கொருக்குபேட்டை, பெரம்பூர், திருவள்ளூர் ஆகிய முக்கிய ரெயில்வே தடங்களில் நாள்தோறும் குறைந்தபட்ச 3 பேர் தண்டவாளத்தை கடக்க முற்பட்டு ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெயில் விபத்தில் பலியானோர் பெரும்பாலும் இளவயதினர்தான். அதிலும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், ஏதாவது நிறுவனத்தில் பணியாற்றும் இளவயதினர்தான் அதிகமாக பலியாகி இருக்கிறார்கள் என்று ரெயில்வே போலீசார் தெரிவிக்கின்றனர்.
பெருமபாலும் தண்டவாளத்தை கடக்க முற்படும் நபர்கள் செல்போன் பேசிக்கொண்டு நடப்பதாலும், காதில் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டே நடப்பதாலும், ரெயிலில்அடிபட்டு பலியாகிறார்கள் என தெரியவருகிறது.
இது குறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ புறநகர மின்சார ரெயில்அதிவேகத்தில் புறப்படும். அப்படி இருக்கையில் தண்டவாளத்தை கடப்பவர்கள் ரெயிலின்வேகத்தை கணக்கிடமுடியாமல் அடிபட்டு இறக்கிறார்கள்.
எழும்பூரில் கடந்த 4 மாதத்தில் 45 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரலில் 63 பேராக இருந்தது. தாம்பரம் பகுதியில் கடந்த 4 மாதங்களில் 44 பேரும், கடந்த ஆண்டும் 42 பேரும் இறந்திருந்தனர்.
செங்கல்பட்டு பகுதியில் கடந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் 5 பேர் மட்டுமே ரெயிலில் அடிபட்டு இறந்தநிலையில், இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் 32 பேர் பலியாகியுள்ளனர். சென்ட்ரல்ரெயில்நிலைய பகுதியில் 30 பேரும், கொருக்குபேட்டை பகுதியில் 45 பேரும், பெரம்பூர் பகுதியில் 30 பேரும், திருவள்ளூர் பகுதியில் 17 பேரும் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர் என ரெயில்வேபோலீசார் அளித்த புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது