
நாகை மாவட்டத்தில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவழை தீவீரமடைந்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின் படிப்பினையாக வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சென்னையில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அரசு, ஊடகங்கள் என ஒட்டுமொத்த கவனமும் சென்னையை நோக்கியதாகவே உள்ளது.
ஆனால், அதேநேரத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
நாகை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம், கொள்ளிடம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக தலைஞாயிறில் 27 செ.மீ., மழையும், வேதாரண்யத்தில் 16 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியுள்ளார்.
வேதாரண்யத்தில் கனமழை காரணமாக 1500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாய்க்கால்களில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்களில் புகுந்தது. இதனால், லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தண்ணீர் வெளியேறினால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். இதனால் பயிர்கள் அழுகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் கவலை தரிவித்துள்ளனர்.
சீர்காழி, வெள்ளப்பள்ளம்,கேவரோடை, புதுப்பட்டினம், ஆக்கால்புரம், தரங்கம்பாடி, தலசங்காடு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். சீர்காழி, தரங்கம்பாடி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை பெய்துவருவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அரசின் கவனம் சென்னையை மையப்படுத்தியதாக இல்லாமல், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.