
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று தொடங்கியது.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதல் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க நாளான இன்று தொழிற்கல்வி பாடப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்க உள்ளவர்கள், தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், கலந்தாய்வில் பங்கேற்பவர் தேவையான அசல் சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும் என்றும், 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே கலந்தாய்வுக்கு வரவேண்டும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை எஸ்.சி பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மறுநாள் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் விளையாட்டுப் பிரிவு மாணவ-மாணவியருக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், அதனைத்தொடர்ந்து 21ம் தேதி அவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.