
விருதுநகர்
தங்களது விளைநிலங்களை பாழ்படுத்தி வரும் வேறு சமூகத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், வெள்ளூர் கிராமத்தில் கட்டடம் கட்டுவது தொடர்பாக இரண்டு வெவ்வேரு சமூகத்தினரிடையே ஏற்கெனவே பிரச்சனை நிலவி வந்தது. இது தொடர்பாக சிவகாசி வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர், அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், "வெள்ளூர் - சிதம்பராபுரம் சாலையில் உள்ள தோட்டத்தில் ஊன்றப்பட்டிருந்த கல்தூண்களை மூர்த்தி என்பவர் உள்பட ஆறு பேர் சேர்ந்து அகற்றியுள்ளனர்.
எங்களது சமூதாயத்தைச் சேர்ந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். மேலும், விளை நிலங்களையும் பாழ்படுத்தி வருகின்றனர். இதனால், பெரும்பாலான சொத்துகளை இழந்துவிட்டோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் அந்த தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவு மற்றும் உள்துறைச் செயலருக்கும் ஏற்கெனவே மனு அளித்துள்ளோம்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.