பூச்சி முருகன், துறைமுகம் காஜாவுக்கு புதிய பதவி..முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்..

By Thanalakshmi VFirst Published Jan 22, 2022, 9:29 PM IST
Highlights

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி முருகனையும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக காஜா முகைதீனையும் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பூச்சி எஸ். முருகன் ஏற்கனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக் குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இதுக்குறித்து தழிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், அனைவருக்கும் வீட்டுவசதி என்ற குறிக்கோளை எய்தும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும் வாங்கத்தக்க விலையில் வீடுகளின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்காக பல்வேறு திட்டங்கள் வாயிலாக, இலட்சக்கணக்கான மக்கள் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கிய பெருமைக்குரியது. 

அத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக் குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுப்போன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீன் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்தான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”இந்த துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில், பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பல்வேறு கடனுதவித் திட்டங்களைச் செயல்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் ஓர் நிறுவனம் ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே இக்கழகத்தின் செயல்பாடுகளை மேலும் செம்மைபடுத்திடும் வகையில் அதன் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!