
தமிழகத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கவுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து சென்னை கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு தமிழ்நாட்டில் முதல்முறையாக நடத்தப்படது. 38 மையங்களில் 8 முதல் 10 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்பு செய்யப்பட்டது. இதில் 10,462 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 9,951 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அதில் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 6,639 இடங்களுக்கு 6,082 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 5,995 பேர் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு வருகை புரிந்தனர். அதாவது 87 பேர் வரவில்லை. முதல் கட்ட கலந்தாய்வு முடிவில், 6,043 பேருடைய இணையவழி கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி வாரியாக 6043 பேருக்கு இணைவழி ஒதுக்கீடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 76 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளது. ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 3 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 136 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 6 பிடிஎஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 375 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை பொதுப்பிரிவினர் தவிர்த்து ஏனைய பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைன் நடைபெறும். மத்திய அரசு தெரிவித்துள்ள படி, வரும் 14 ஆம் தேதி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழகத்தில் துவங்கவுள்ளது. 1.1 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். கொரோனா பாதிப்பு குறைவதால் கவனக்குறைவாக இல்லாமல் நாளைய மெகா முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.