சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார். முதல் தகவல் அறிக்கை கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய N.I.C. காரணம் எனவும், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்க்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில், பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தைத் தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக முதலிலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
குற்றம் நடந்த பிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யாமல் விட்டிருந்தாலோ அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணிநேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்தபிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டியபிறகும் அரசைக் குறை சொல்வது, அரசியல் ஆதாயத்திற்குத்தானே தவிர, உண்மையான அக்கறையோடு செய்யப்படுவது இல்லை என்று இந்த மாமன்றத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எப்ஐஆர் வெளியானது எப்படி.?
24.12.2024 அன்று பிற்பகல் சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலையிலேயே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இது காவல் துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை. இருந்தாலும், எதிர்க்கட்சி என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்கள்? முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாகப் பேசுகிறார்கள். அதற்குக் காரணம் யார்? ஒன்றிய N.I.C. (National Informatics Centre தேசிய தகவல் மையம்). அது நம்முடைய காவல் துறையால் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு, அதற்குப்பின்னால் அந்தத் தொழில்நுட்பக் கோளாறும் சரிசெய்யப்பட்டிருக்கிறது.
யார் அந்த சார்.?
அது தொடர்பாக அந்த நிறுவனமும் விளக்கம் கொடுத்து, N.I.C.-யிலிருந்து கடிதமும் எழுதியிருக்கிறார்கள். அடுத்து, பாதுகாப்பு இல்லை; கேமரா இல்லை என்று பொத்தாம்பொதுவாச் சொல்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை. சம்பவம் நடந்த வளாகத்தைச் சுற்றியிருக்கிற பகுதிகளிலிருந்த கண்காணிப்புக் கேமிராக்கள் உதவியோடதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். மூன்றாவது குற்றச்சாட்டு, முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு, “யார் அந்த சார்?” என்று கேட்கிறார்கள். மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்பொழுது இந்தப் புகாரை விசாரிக்கிறார்கள்.கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
யாராக இருந்தாலும் நடவடிக்கை
இந்தப் புலன் விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருக்கிறார்களா என்பது தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும் சரி, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்; அது யாராக இருந்தாலும் சரி; அவர்கள் மீது தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை இந்த அவைக்கு 100 சதவீதம் உறுதியோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதுமட்டுமல்ல; இன்னும் முக்கியமானது, இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும். அதோடு, சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை என்பதை இந்த அவைக்கு நான் மீண்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எதிர்க்கட்சிகளைக் கேட்க விரும்புவது "யார் அந்த சார்?" என்று சொல்லி குற்றம்சாட்டுகிறீர்கள். உண்மையாவே உங்களிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சென்று அதைக் கொடுங்கள்; அதைச் சொல்லுங்கள். அதை யார் தடுக்கப் போகிறார்கள்? அதைவிட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் இலாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
திமுகவில் உறுப்பினராக இல்லை
இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் இருப்பது போல ஒரு சதித் தோற்றத்தை உருவாக்க பலர் முயற்சி செய்கிறார்கள். மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன். அவர் தி.மு.க.-வில் உறுப்பினராக இல்லை. தி.மு.க. ஆதரவாளர். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன், அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், தி.மு.க.-வினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர் தி.மு.க. உறுப்பினர் அல்ல; தி.மு.க. அனுதாபி. அதுதான் உண்மை.
எது எப்படியிருந்தாலும், குற்றவாளியை நாங்கள் காப்பாற்றவில்லை. உடனடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளதோடு, குண்டர் சட்டத்திலும் அடைத்திருக்கிறோம். எனது அரசைப் பொறுத்தவரையில், எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த தனிப்பட்ட நபராக இருந்தாலும் சரி, ஏன் காவல் துறையாக இருந்தாலும் சரி, பெண்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, நாங்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.