
கடந்த 5 மணி நேரமாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து வைகை அணையில் நீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக மேலூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால், இன்று சென்னை - கன்னியாகுமரி சாலையில் மினி கோயில் பகுதியில் சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நான்கு வழிச்சாலையில் சாமியானா பந்தல் போட்டு சக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாப்பாடு தண்ணீர் வழங்கி வந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர், தஞ்சை செல்லும் பேருந்துகள் சிவகங்கை வழியாக திருப்பி விடப்படுகின்றன. திருச்சியில் இருந்து செல்லும் பேருந்துகள், கொட்டாம்பட்டி, நத்தம் வழியாக மதுரைக்கு திருப்பி விடப்படுகின்றன.
இந்நிலையில், வைகை அணையில் நீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வைகை அணையிலிருந்து கூடுதலாக 900 க.அடி தண்ணீரை 21 முதல் 27 ஆம் தேதி வரை திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக 200 கன அடி வீதமும் பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி அளவும் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார்.