சென்னையில் நேற்று இரவும் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை… சென்னை, காஞ்சிபுரம் . திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

By Selvanayagam PFirst Published Oct 5, 2018, 6:42 AM IST
Highlights

சென்னையில் நேற்று இரவும் மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கொடுத்து ஓடியது. சென்னையின் பல பகுதிகளில் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவை யொட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், சேலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக தூறியது.

இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக 7-ந்தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதாவது 7-ந்தேதிக்கு ரெட் ‘அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து வருகிறது.

எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

நேற்று காலை முதல் மாலை வரை லேசான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வந்த நிலையில், நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இன்று சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தவிட்டுள்ளார்.

இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!