
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே கடையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் செயினைப் பறிக்க முயன்ற நபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் கடைத்தெருவில் மளிகைக் கடையில் நின்று கொண்டிருந்தார் ஒரு பெண். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், அவர் அணிந்திருந்த செயினை அறுத்துப் பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போடவே, அவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். விவரம் அறிந்து, தப்பியோடிய அந்த மர்ம நபர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவன் தப்பி ஓடி விட்டான். மற்றொருவனை விரட்டிப் பிடித்த பொதுமக்கள், அவனுக்கு தர்ம அடி கொடுத்து, மரத்தில் கட்டி வைத்தனர்.
அங்கும் அவனைப் புரட்டி எடுத்த மக்கள், பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவனைக் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதில் அவர்கள் இருவரும் வந்த வாகனத்தில் ‘ப்ரஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின், அவனது இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நபர் சென்னையைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.