
சென்னையில் இயங்கி வந்த கனிஷ்க் தங்க நிறுவனம், இருப்பு மற்றும் விற்பனை கணக்குகளை மோசடியாக தயாரித்து, வங்கிகளில் கடன் வாங்கியது அம்பலமாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கனிஷ்க் ஜூவல்லரியின் இயக்குநர் பூபேஷ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
முதன்முறையாக 2008ஆம் ஆண்டில் தமது நிறுவனத்தில் 24 கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் இருப்பு உள்ளதாகவும், 2007ஆம் ஆண்டு விற்பனை 80 கோடி ரூபாய் என்றும் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் கணக்கு காட்டியுள்ளார். இதை நம்பிய சென்னை ராஜாஜி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி, 50 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இதன்மூலம் தொழிலை விரிவுபடுத்திய பூபேஷ்குமார் ஜெயின், அடுத்தடுத்த ஆண்டுகளில் மோசடி கணக்குகள் மூலமே, தங்க நகை இருப்பையும், விற்பனையையும் அதிகரித்து காட்டியுள்ளார்.
கணக்குகளை சரியாக ஆராயாமல், கனிஷ்க் நிறுவனத்திற்கு கடன் வழங்கும் வரம்பை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, எஸ்பிஐ வங்கி வழங்கிய கடன்களை சுட்டிக்காட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி., பேங்க் ஆஃப் இந்தியா உள்பட மேலும் 13 வங்கிகளில் கடந்த 2011ஆம் ஆண்டில் 115 கோடி வரை கடன் வாங்கியுள்ளார்.
கோடிக்கணக்கில் கடன் வாங்கிய பூபேஷ் குமார் ஜெயின், வட்டியையோ கடனையோ செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார். கடன் கொடுத்த வங்கிகளால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதனால், கனிஷ்க் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, எஸ்பிஐ தலைமையில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. கனிஷ்க் நிறுவனம் வழங்கிய மோசடி கணக்குகளை சரியாக ஆராயாமல், எஸ்பிஐ தலைமையிலான வங்கி கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும், அந்த நிறுவனத்தின் கடன் வரம்பை உயர்த்தியுள்ளது.
இதை பயன்படுத்திக் கொண்ட கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், ஐதராபாத், கொச்சின், மும்பை ஆகிய இடங்களில் கிரிஷ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகளையும் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் எஸ்பிஐ வங்கி கூட்டமைப்புக்கு அளித்த திட்ட அறிக்கையின்படி, அவரது நகைக்கடைகள் இயங்காததால், கனிஷ்க் தங்க நிறுவனத்திற்கான கடன் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த 2017ஆம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டங்களில் கனிஷ்க் தங்க நிறுவனத்திற்கு எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் மொத்தமாக 824 கோடியே 15 லட்சம் ரூபாயை கடன் கொடுத்துள்ளன.
இதனிடையே, கனிஷ்க் நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புதுப்பாக்கத்தில் நகை உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. தயாரித்த நகைகளை கிரிஷ் ஜூவல்லரி மூலம் விற்றதுடன், சென்னையில் உள்ள இதர பிரபல நகை கடைகளுக்கும் விற்றுள்ளனர்.
இதன்மூலம் 20 கோடி ரூபாய் கலால் வரி மோசடி செய்ததாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் கனிஷ்க் கோல்டு நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது செய்யப்பட்டார். அடுத்த சில வாரங்களில் அவர் ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், தாங்கள் கொடுத்த கடனுக்கு பல மாதங்களாக வட்டி வராததால் சிபிஐ-க்கு எஸ்பிஐ வங்கி தலைமையிலான கூட்டமைப்பு புகார் கடிதம் அனுப்பியது. இதையடுத்து, பூபேஷ்குமார் மீது டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பூபேஷ் குமாரின் வீடு மற்றும் தியாகராயநகரிலுள்ள அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இந்த மோசடியில் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பதாக சிபிஐ விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பூபேஷ் குமார் ஜெயினிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் பூபேஷ் குமார் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, 11,500 கோடி ரூபாய் அளவிற்கு நிதி மோசடியில் ஈடுபட்டு விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். அவருக்கு முன்னதாகவே மல்லையா தப்பிவிட்டார். இப்படியாக தொழிலதிபர்கள், தொடர்ச்சியாக வங்கிகளில் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.