கற்பூரம் ஏற்ற தடை  !  பக்தர்கள் அதிர்ச்சி…மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி….

First Published Feb 7, 2018, 10:30 AM IST
Highlights
Camphor mounted ban in Nellaiyappar koil


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் கற்பூரம் மற்றும் விளக்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் இரவு 10.30 மணிக்கு ஏற்பட்ட திடீர்  விபத்து பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின.

மேலும் வண்ண பூச்சுகள், அழகிய தூண்கள், கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் போன்றவை அழிந்துபோயின. பசுபதீஸ்வரர்  சன்னதி மேற்கூரை இடிந்து விழுந்தது. கோவில் வளாகத்துக்குள் உள்ள கடை ஒன்றில் ஏற்றப்பட்ட கற்பூரம்தான் இந்த விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட அறநிலையத்துறை கோயில்களில் குறிப்பிட்ட சன்னதிகளை தவிர மற்ற இடங்களில் கற்பூரம் மற்றும் , விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாக அலுவலர் ரோஷினி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. .மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ சார்பில் கோயிலின் பழமையான சிற்பங்களை துாய்மைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக கோயில் செயல்அலுவலர் ரோஷினி செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு, நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதி, கொடிமரம், அம்மன் சன்னதி, சனீஸ்வரர் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் மட்டுமே விளக்குகள் ஏற்றி வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

குறிப்பிட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் தீப வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ரோஷினி தெரிவித்தார். நெல்லையப்பர் கோவிலில் கற்பூரம் மற்றும் விளக்கேற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளதையடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

click me!