
பவானியாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டிவரும் தடுப்பணைகளால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு பெருமளவில் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆறு தற்போது வறண்டு வருகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரமான பவானி ஆற்றை அழிக்கும் விதமாக தேக்குவட்டை என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டியிருக்கிறது.
இதனால் பவானி ஆற்றுக்கு வரும் தண்ணீர் ஒடை போல் ஆகிவிட்டதாக தமிழக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி கேரள அரசு பவானி ஆற்றில் நூறு மீட்டர் நீளம், ஐந்து மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்டி முடித்துள்ளது.
மேலும் ஐந்து தடுப்பணைகளை கட்டிவிட்டால் பவானி ஆற்றுக்கு தண்ணீரே வராது என்றும் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.