
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் சுவரில் துளைப்போட்டு, மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து வங்கிகளும் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.
இதைதொடர்ந்து சென்னை அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவுவேலை முடிந்து, அனைவரும் வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில், இன்று காலை ஊழியர்கள் வங்கிக்கு சென்றனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கியின் சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரிந்தது.
தகவலறிந்து அண்ணா சாலை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து வருகின்றனர். மேலும், வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை வைத்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.