
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் சென்னை நகரை கருமேகம் சூழ்ந்ததால் மாலை 5 மணிக்கே சென்னை இருண்டு காட்சி அளிக்கிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கப் போகிறது என இந்திய வானிலை ஆய்வு மையமும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெதர்மேன் பிரதீப் வெளியிட்டுள்ள பதிவில் சென்னை, காரைக்கால், திருவாரூர், கடலூரின் சிதம்பரம், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் மழை பெய்து வருவதாகவும் மழை குறித்து கணிக்க முடியாத சூழல் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
தற்போது பெய்து வரும் மழை வெறும் ட்ரைலர்தான் எனவும் இன்னும் ஒரு வார காலம் வெளுத்து வாங்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே தமிழகம் முழுவதும் கார் மேகங்கள் சூழ்ந்து மழைக்கு ஏதுவான தோற்றத்தை பிரதிபலித்து வருகிறது. அதன்படி சென்னை நகரில் சூழும் கருமேகத்தால் சென்னையே மாலை 5 மணிக்கெல்லாம் இருண்ட தொடங்கி விடுகிறது.
வழக்கமாக இரவு 7 மணிக்குதான் இருட்ட ஆரம்பிக்கும். ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழையால் மாலை 5 மணிக்கே சென்னை இருண்டு காட்சியளிக்கிறது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே மாணவ மாணவர்களை வீட்டிற்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.