டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் 10 மாதங்கள் ஆகியும் வெளியிடாது ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடுவது கால தாமதம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, முடிவுகளை அறிவதற்காக இரு ஆண்டுகள் காத்திருப்பது போட்டித் தேர்வர்களின் மனநிலையை கடுமையாக பாதிக்கும். ஆனால், இதுகுறித்த அக்கறை எதுவும் அரசுக்கு இல்லை. அதனால் தான் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியை ஒன்றரை ஆண்டுகளாக காலியாக வைத்துக் கொண்டு, வெறும் நான்கு உறுப்பினர்களுடன் ஆணையத்தை அரசு நடத்தி வருகிறது.
2023-ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை 19 ஆள்தேர்வு அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 4217 மட்டுமே. தேர்வாணைய வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது இந்த ஆண்டாகத் தான் இருக்கக்கூடும். இவ்வளவு மந்தமாக செயல்படுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பே தேவையில்லை.
undefined
தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதி 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவரையும், 10 உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.