அனைத்து விவசாயிகள் கடனையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் - ஆட்சியரிடம் ஐயாக்கண்ணு மனு...

First Published Apr 3, 2018, 10:02 AM IST
Highlights
All the loans of farmers will cancel request to central government


தஞ்சாவூர் 

அனைத்து விவசாயிகள் கடனையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தஞ்சாவூர் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் ஐயாக்கண்ணு தெரிவித்து இருந்தார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 1-ஆம் தேதி கன்னியாகுமரியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் விழிப்புணர்வு நடை பயணம் தொடங்கப்பட்டது. 

நூறு நாள்கள் பயணமாக சென்னை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர் நேற்று தஞ்சைக்கு வந்தனர். பின்னர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை, ஐயாக்கண்ணு தலைமையில் சென்ற விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். 

அதில், "விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுக்காமலும், சாகுபடி செய்ய தண்ணீர் கொடுக்காமலும் மத்திய அரசு ஏமாற்றுவதால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு ஓடிவிட்டால் அந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கி பெட்ரோல், மீத்தேன், ஐட்ரோ கார்பன் எடுப்பதுடன் நிலத்தடி நீர்மட்டத்தை 2000 அடிக்கு கீழே கொண்டு சென்றுவிடுவார்கள்.

பிறகு குடிக்க கூட தண்ணீர் கிடைக்காத நிலையில் நிலத்தை விற்காத விவசாயிகளும் சாகுபடி செய்ய முடியாது. தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். 

இந்த நிலை ஏற்பட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவு பொருட்களை மக்களுக்கு கொடுத்து ஆண்கள் ஆண்மை இழக்கவும், பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து விவசாயிகள் கடனையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 

ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி ஏரி, குளங்கள், கால்வாய்களை தூர்வார வேண்டும். 

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். 

நதிகளை தேசியமயமாக்கி நதிகளை இணைக்க வேண்டும். 

கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்கவும், பயிர் காப்பீடு விரைவாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கருப்புக்கான நிலுவைத் தொகையை விரைவாக வழங்க வேண்டும். 

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக மாதம்தோறும் ரூ.5000 வழங்க வேண்டும். 

மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்ய தடைவிதிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்த மக்களிடம் விழிப்புணர்வு சுற்றறிக்கைகளை விவசாயிகள் வழங்கினர். 

click me!