தமிழ்நாட்டில் இன்னும் 10 நாள்களில் அனைத்து காய்ச்சல்களும் கட்டுப்படுத்தப்படும் –சுகாதாரத்துறை செயலாளர் உறுதி…

First Published Aug 11, 2017, 7:16 AM IST
Highlights
All the feeds will be restricted in Tamil Nadu for 10 days - Secretary of State


சேலம்

தமிழ்நாட்டில் டெங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றும் இன்னும் 10 நாள்களில் அனைத்து காய்ச்சல்களும் கட்டுப்படுத்தப்படும்” என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்னார்.

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 7 பேர் பலியாயினர். இதனையடுத்து அந்தப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 9-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சுகாதாரத்துறைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் நேற்று மீண்டும் ஓமலூர் வந்து ஆய்வு நடத்தினார். இதற்காக அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

மேலும், அரசு மருத்துவமனை முன்பு இருக்கும் டீக்கடைக்குச் சென்ற அவர், அங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஓமலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே கோவில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்த தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு இருப்பதை பார்த்து, அந்த தண்ணீரை கீழே கொட்டினார்.

பின்னர் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் சுகாதாரத்துறைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “தமிழகத்தில் கேரள மாநிலத்தையொட்டி உள்ள கோவை, ஈரோடு, சேலம் உள்பட 13 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த காய்ச்சல்களை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள், 3500 சுகாதார ஆய்வாளர்கள், 134 பூச்சியியல் வல்லுனர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் இல்லாத இடங்களில் மாற்று மருத்துவர்களும் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நல்ல தண்ணீரில்தான் டெங்குவை பரப்பும் கொசு உற்பத்தியாகிறது. டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இல்லை என்றாலும் தடுப்பு முறைகள் உள்ளன. இந்த கொசுகளை 21 நாட்களில் முழுவதும் அழிக்க முடியும். ஒட்டுமொத்த குழுவாக, அதாவது மருத்துவர்கள், அரசு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து மக்களின் தேவைகளை உள்வாங்கி செயல்பட்டு வருகின்றனர்.

என்றாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுகள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கும் தேங்காய்சிரட்டை, டயர், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் இணைந்து இப்பணியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற பாடுபடவேண்டும்.

இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 1 இலட்சம் பேரும், கேரளாவில் 15 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இன்னும் 10 நாட்களில் அனைத்து காய்ச்சல்களும் கட்டுப்படுத்தப்படும்.

மக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் 416 நகர மருத்துவமனைகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. 770 குழந்தைகளுக்கான வாகனங்கள் மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் பூட்டி உள்ள துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு திறக்கப்படும். போதுமான மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓமலூர் அரசு மருத்துவமனை நகரின் மையப்பகுதியில் உள்ளதால் இங்கு கூடுதல் கட்டிடம் மற்றும் படுக்கை வசதிகள், புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், போலி மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குகூட சில இடங்களில் பதியப்பட்டுள்ளது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

tags
click me!