ஊழலுக்கு எதிராக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது புகார் கொடுத்த சமூக ஆர்வலர் கொன்று புதைப்பு…

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 10:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
ஊழலுக்கு எதிராக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது புகார் கொடுத்த சமூக ஆர்வலர் கொன்று புதைப்பு…

சுருக்கம்

செந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக கூலிப்படையினர் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (70). சமூக ஆர்வலரான இவர், ஊழலுக்கு எதிராக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது உயரதிகாரிகளிடம் பல்வேறு புகார்களை அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2008–ஆம் ஆண்டு அந்த பகுதியில் பணியாற்றிய கிராம நிர்வாக அதிகாரி மீது இலஞ்ச ஒழிப்புத்துறையில் விஸ்வநாதன் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் அந்த கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். மேலும், பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19–9–2016 அன்று விஸ்வாதன் திடீரென மாயமானார்.

இதுகுறித்து விஸ்வநாதனின் மருமகள் அமுதா குவாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே விஸ்வநாதன் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனுவை தாக்கல் செய்தனர். அதன் பேரில் சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் முதல் கட்டமாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கூலிப்படையைச் சேர்ந்த சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள், விஸ்வநாதனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும், விஸ்வநாதனை கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காண்பிப்பதாகவும் காவல்துறையினர் கூறினர்.

அதன் பேரில் காவல்துறையினர் பிணத்தை தோண்டி எடுப்பதற்காக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் செந்துறை தாசில்தார் அமுதா மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நில அளவையர் மூலம் புதைக்கப்பட்ட இடம் அரியலூர் மாவட்ட எல்லைக்குள் வருகிறதா? என்பது குறித்து பார்த்தனர்.

அப்போது, பிணம் புதைக்கப்பட்ட இடம் கடலூர் மாவட்ட எல்லைக்குப்பட்ட வெள்ளாறு என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி தாசில்தார் மற்றும் வருவாய்துறையினர் இடத்தை அளவீடு செய்து அந்த இடம் அரியலூர் மாவட்ட எல்லைக்குட்பட்டது என கூறி விட்டு சென்றனர்.

அதன் பிறகு அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட வருவாய் துறையினர் இணைந்து இடத்தை அளவீடு செய்த போது கடலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட இடத்தில் பிணம் புதைக்கப்பட்டது முடிவில் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து பெண்ணாடம் காவல்துறையினரும், கடலூர் மாவட்ட வருவாய் துறையினரும் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் விஸ்வநாதன் காணாமல் போன வழக்கினை கொலை வழக்கமாக மாற்றம் செய்து அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நயினார்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அழகர் ஆகிய மூன்று கூலிப்படையினரை குவாகம் காவல்துறையினர் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நியாயமாக விசாரித்தால், இந்த வழக்கில் அரசு அதிகாரிகளும், முக்கிய அரசியல்வாதிகளும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ஹார்வர்டுக்கே டஃப் கொடுக்கும் சீனா.. இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த VIT!
அமைச்சர் துரைமுருகன், கவிஞர் யுகபாரதிக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..