பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு; வருவாய் இழப்பு என பால் உற்பத்தியாளர் குற்றச்சாட்டு…

First Published Oct 23, 2017, 8:38 AM IST
Highlights
Abuse of milk in cooperative societies Milk manufacturer charges as loss of revenue ...


காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடப்பதாகவும், வழங்கும் பாலுக்கு குறைவாக பணம் கொடுத்து வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர் என்றும் பால் உற்பத்தியாளர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

கிராமத்தை சேர்ந்தவர்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, உற்பத்தி செய்யும் பாலை, ஆவின் நிறுவனத்திற்கு அனுப்புகின்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், உத்திரமேரூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகிய, ஏழு பால் உற்பத்தியாளர் சரகங்கள் உள்ளன.

இவற்றின்கீழ் மாவட்டம் முழுவதும் 385 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இதில் 72 மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் 42 ஆயிரத்து 500 பேர், உறுப்பினர்களாக உள்ளனர்.

மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக செயல்படுகிறது. ஆனால், மற்ற சங்கங்கள் முறையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சங்கங்கள் மூலம், உற்பத்தியாகும் பாலை, திருக்கழுக்குன்றம், பெரும்பாக்கம், உத்திரமேரூர், பெருநகர் ஆகிய பகுதிகளில், 3000 லிட்டர் கொள்ளளவு மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திற்கும், 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய சானுார், பாலுசெட்டிசத்திரம் ஆகிய இடங்களிலுள்ள உச்ச மைய பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு அனுப்புகின்றனர்.

சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலின் தரத்திற்கேற்ப, கொழுப்பு இதர சத்துக்கள், பசும்பால், எருமைபால் ஆகியவற்றிக்கு விலை நிர்ணயம் செய்து, வாரத்திற்கு ஒரு முறை தொகையை சங்கங்களுக்கு வழங்குகின்றனர்.

சங்க நிர்வாகிகள், பால் உற்பத்தியாளர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, பணத்தை பட்டுவாடா செய்கின்றனர்.

மாவட்டத்தில், சில கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களிடமிருந்து வாங்கும் பாலை, சங்க கணக்கில் வரைவு வைப்பதில்லை. உறுப்பினர்கள் வழங்கும் பாலை, பால் உற்பத்தி பதிவேட்டில் பதிவு செய்யாமல் தன்னிச்சையாக, தனிநபருக்கு விற்பனை செய்கின்றனர்.

சில சங்க நிர்வாகிகள் இரண்டு உற்பத்தி பதிவேடுகளை பராமரித்து, ஒரு சிலரின் பெயர்களில் மட்டும் உற்பத்தியை, சங்க கணக்கில் காண்பிக்கின்றனர்.

மற்றவர்கள் வழங்கும் பாலை, சங்க கணக்கில் பதிவு செய்யாமல், தனி நபருக்கு விற்பனை செய்து சுயலாபம் ஈட்டுகின்றனர். இதனால், உறுப்பினர்களுக்கு, பணம் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்ததால், விவசாயிகள் விவசாயம் செய்யவில்லை. இதனால், கால்நடைகள் வளர்ப்பில், ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கங்களுக்கு, உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பாலை வழங்கி, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து, குடும்பத்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில், இது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதால், உறுப்பினர்களுக்கு உரிய பணம் கிடைப்பதில்லை. இதை மாற்ற, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், கால்நடைகளை மேய்த்து, உற்பத்தி செய்யும் பாலை, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குகிறோம். ஆனால், சங்கத்தை நிர்வாகம் செய்வோர், அரசு நிர்ணயத்த விலையை விட, 10 ரூபாய் குறைவாக கொடுக்கின்றனர். இதனால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. முழு தொகையும் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பால் உற்பத்தியாளர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

click me!