பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு 300 பெண்கள் உள்பட 500 விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்...

 
Published : Apr 04, 2018, 09:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு 300 பெண்கள் உள்பட 500 விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்...

சுருக்கம்

500 farmers including 300 women held in hunger strike for requesting water for irrigation

திருப்பூர்
 
திருப்பூரில் பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு 300 பெண்கள் உள்பட 500 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை நீராதாரமாக கொண்டு பி.ஏ.பி. பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த திட்டத்தின்படி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் ஏக்கருக்கு வருடந்தோறும் சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. 

பி.ஏ.பி. தண்ணீரை அடிப்படையாக கொண்டு கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் அவரை, கத்தரி, பீட்ரூட், தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக திருமூர்த்திஅணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள சிற்றாறுகள் மூலமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து முற்றிலுமாக நின்றது.

இதனையடுத்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக பெறப்படுகின்ற தண்ணீரைக் கொண்டு முதலாம் மண்டல பாசனத்திற்கு முதல்சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்குவதற்காக அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் வெயிலின் தாக்கம் காரணமாக ஏழுகுளம் பாசனப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

இந்தச் சூழலில் முதலாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் சுற்று தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதனை அறிந்த ஏழுகுளம் பாசன விவசாயிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தண்ணீரை பி.ஏ.பி. திட்டத்திற்கு வழங்கும்போது அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து நேற்று திருமூர்த்திஅணை அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக ஏழுகுளம் பாசன விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

300 பெண்கள் உள்பட 500 பேர் இந்தப போராட்டத்தில் கலந்து கொண்ட தையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நேற்று இரவு வரையிலும் நீடித்தது. 

இந்த நிலையில், இரவு 7.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் ஆர்.டி.ஓ அசோகன், துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தாசில்தார் தங்கவேல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது வரும் 5-ஆம் தேதி (அதாவது நாளை) தண்ணீர் திறப்புக்கான அறிவிப்பு வெளியிடப்போவதாக அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். 

இந்த போராட்டத்தால் திருமூர்த்தி அணைப்பகுதியில் காலையில் இருந்து இரவு வரையும் பரபரப்பு நிலவியது. விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தையொட்டி தளி காவலாளர்கல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!