45 மாடுபிடி வீரர்களை குத்தி தூக்கி வீசிய சல்லிகட்டு காளைகள்; பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதி...

First Published Feb 26, 2018, 8:31 AM IST
Highlights
45 maadu pidi players threw by sallikattu bulls


புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த சல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்ட காளைகள்  45 மாடுபிடி வீரர்களை குத்தி தூக்கி விசியதில் பலத்த காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் சல்லிக்கட்டு நடத்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த சில நாள்களாக வாடிவாசல், பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஆட்சியர் கணேஷ் சல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர், நேற்று சல்லிக்கட்டு நடந்தது.

சல்லிக்கட்டுக்காக கொண்டுவரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவ குழுவினரும், மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினரும் பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காலை 8 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து சல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர்.

முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை யாரும் பிடிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 816 காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர். சில காளைகள் வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி எறிந்தன.

இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 45 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 21 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஆடு, குத்து விளக்கு, வெள்ளி நாணயம், பணம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

சல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட உதவி ஆட்சியர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர், புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கண்டுகளித்தனர்.

click me!