ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் அதிரடி சோதனை... ரூ.3.41 கோடி, 60 சவரன் தங்க நகை பறிமுதல்!!

By Narendran SFirst Published May 24, 2022, 9:34 PM IST
Highlights

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 20 இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 60 சவரன் தங்க நகை, 2 கார்கள் மற்றும் 3.41 ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 20 இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 60 சவரன் தங்க நகை, 2 கார்கள் மற்றும் 3.41 ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆருத்ரா கோல்டு என்னும் நிதி நிறுவனம் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையிடம் சென்னை அமைந்தகரை. ராஜசேகரன் என்பவரின் நிறுவனமான இது, நகை மீதான கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுக்கப்படும் என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவியது. குறிப்பாக மார்ச் மாதம் இந்த விளம்பரத்தை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்து வந்துள்ளனர்.

அதிலும்  கடந்த மே ஆறாம் தேதி ஆரணி சேவூர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் கிளை ஒன்றை திடீரென உருவாக்கியுள்ளது. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 36 சதவீதம் வட்டி அளிப்பதாக ஏற்கனவே அந்த விளம்பரத்தின் அடிப்படையில் இந்த நிறுவனம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பி பொதுமக்கள் பலரும் முதலீடு செய்தனர். இந்த நிலையில் வங்கிகளே மிக குறைந்த வட்டி அளிக்கும் நிலையில் முப்பத்தி ஆறு சதவீதம் வட்டி எவ்வாறு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. பொதுமக்களிடம் ஆசை காட்டி பணத்தை மோசடி செய்யும் வேலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் ஆரணி சேவூர் கிளையில் ஆருத்ரா கோல்ட் நிதிநிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் இதேபோன்ற திட்டம் அமல் படுத்தப்பட்டு ரகசியமாக மக்களிடமிருந்து முதலீடு செய்யப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரணையை துவங்கினர். சென்னையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அமைந்தகரை முகப்பேர், அண்ணா நகர் ராஜமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் தொடர்பாக இருபத்தி ஆறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதையடுத்து, இந்த நிறுவனத்தின் 8 இயக்குனர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளனர். சோதனையில் 6 லேப்டாப்புகள், 44 செல்போன்கள், 60 சவரன் தங்க நகை, 2 கார்கள் மற்றும் 3.41 ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!