
நாகப்பட்டினம்
மயிலாடுதுறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரேநாளில் 220 லிட்டர் சாராயம் கடத்திய நால்வரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் இரயில்வே வாயில் அருகே பெரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் காவலாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அவர்கள் வைத்திருந்த பையில் சாராயம் இருப்பது தெரிந்தது.
காவலாளர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், குத்தாலம் அருகே கடலங்குடி கீழத்தெருவைச் சேர்ந்த ரவி மகன் ரவீந்திரன் (27), அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சங்கர் (38) என்பது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து சாராயத்தை கடத்திய ரவீந்திரன், சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று மயிலாடுதுறை அருகே சேத்தூரில் காவலாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் காரைக்காலில் இருந்து சாராயத்தை கடத்திச் சென்றது தெரியவந்தது.
காவலாளர்கள் விசாரித்ததில் சீர்காழி அருகே புங்கனூர் புதுத்தெருவை சேர்ந்த மன்சூர்அலிகான் மகன் பைசல் (33), மயிலாடுதுறை அருகே வடகரை புலிகண்டமுத்தூரை சேர்ந்த தம்புசாமி மகன் தமிழ்ச்செல்வன் (23) என்பது தெரிந்தது.
பின்னர், இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 120 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
ஒரேநாளில் நால்வரிடம் இருந்து 220 லிட்டர் கடத்தல் சாராயம் கைப்பற்றப்பட்டது. இனி தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெறும் என்று காவலாளர்கள் வட்டாரம் தெரிவித்தது.