
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில், நிச்சயதார்த்தத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்ததில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாட்ஷா. இவரது மகன் அசேன் (22). இவருக்கு வந்தவாசியில் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அப்துல்லாபுரம் கிராமத்தில் இருந்து ஒரு வேனில் 18 பேர் வந்தவாசிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள், நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பினர். வேனை, பாண்டியன் என்பவர் ஓட்டினார்.
உத்தம்பெரும்பாக்கம் கூட்டுசாலை பகுதியில் வேன் வந்துக் கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் வேனை ஓட்டுநர் திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கார் சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 18 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களில் பலத்த காயமடைந்த ஜனத் (50), அமிதாபி (60), ஷரீப் (66), இப்ராகிம் (45) ஆகிய நால்வர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து உக்கம்பெரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தமிம் கொடுத்த புகாரின்பேரில் தூசி காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.