
போதிய மழை பெய்யாததாலும், பருவம் பொய்த்துவிட்டதாலும், இனி மழை பெய்தும் பலனில்லை என்பதாலும் ஏக்கருக்கு ரூபாய் 15 நிவாரணம் வழங்க மதிமுக விவசாய அணி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதிமுக மாநில விவசாய அணி இணை செயலாளர் வரதராஜன் தமிழக முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, இளையரசனேந்தல், விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் ஆண்டுதோறும் பெய்யக் கூடிய பருவமழைக்கு சோளம், குதிரைவாலி, கம்பு போன்ற பல்வேறு நவதானியங்கள் பயறு வகைகளான உளுந்து, பாசி, கொண்டக்கடலை, துவரை பயிரிடுவது வழக்கம்.
விவசாயிகள், புரட்டாசி மாதம் மழையை எதிர்பார்த்து விதைப்பதற்கு தயாராகினர். ஆனால், பருவ மழை தாமதமானதால் வறண்ட நிலத்தில் விதைத்தனர். சில பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. சில ஊர்களில் இன்று வரை மழை இல்லை. முன் கூட்டி பெய்த ஊர்களில் பாசிப்பயறு பயிரிசப்பட்டது. அதன் முதிர்வு காலம் எட்டியதால் திரட்சியின்றி பாசி பயறு நெத்து விளைந்துள்ளது.
உழுது விதைத்து, கிடைபோட்டு, மருந்து தெளித்து, களைஎடுத்தும் ஏக்கருக்கு சுமார் 12 ஆயிரம் செலவாகியுள்ளது. கடந்த ஆண்டு பாசி (பூவாணி) இரகம் ஏக்கருக்கு 6 முதல் 8 குவிண்டால் வரை மகசூல் கிடைத்தது.
ஆனால், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் ஒரு குவிண்டால் கிடைப்பது கூட அரிதாக உள்ளது. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளிடம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் தயாராக வில்லை. எனவே இனிமேல் மழை பெய்தாலும் போதிய விளைச்சல் கிடைப்பது சந்தேகமே.
வேளாண் அதிகாரிகள் பயிரக்கணக்கெடுப்பு, மற்றும் பாதிப்பு கணக்குகளை தெளிவாக எடுத்து ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.