நூறு நாட்களாக 100 அடியைத் தாண்டி நிற்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்…. விவசாயிகள் மகிழ்ச்சி !!

By Selvanayagam PFirst Published Oct 26, 2018, 1:27 PM IST
Highlights

ஜுலை மாதத்தில் இருந்து தொடர்ந்து இன்று வரை 101 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாக அப்படியே இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை கடந்த ஜுலை மாதம் 23 ஆம் தேதி முதல் முறையாக அதன் முழுக் கொள்ளவை எட்டிய நிலையில் கர்நாடகா மாநிலத்தில்  அடுத்தடுத்து பெய்த மழையால் நான்கு முறை நிரம்பி வழிந்தது. இதையடுத்து பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

தொடர்ந்து மேட்டுர் அணைக்கு இன்று வரை கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் தற்போது 13 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 நாட்களைக் கடந்து, 100 அடிக்கும் மேலாக நீடிக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 2006 நவம்பர் 6ம் தேதி வரை 424 நாட்கள் 100 அடியாக நீடித்தது.

மேலும், 2011ம் ஆண்டில் 78 நாட்களும், 2014ம் ஆண்டில் 42 நாட்களும் மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியாக இருந்தது. நடப்பாண்டில், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101ஆவது நாளாக 100 அடிக்கும் மேலாக நீடிக்கிறது. இதனால் அணைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 13,700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 103.76 அடியாகவும், நீர் இருப்பு 69.80 டிஎம்சி ஆகவும் உள்ளது. 

மேட்டூர் அணையின் இந்த நீர் இருப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. இந்த ஆண்டு விவசாயத்துக்கு இந்த நீர் போதுமானது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

click me!