TN RTE மாணவர் சேர்க்கைக்கு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்... மே.30ல் மாணவர்கள் தேர்வு!!

By Narendran SFirst Published May 26, 2022, 3:26 PM IST
Highlights

RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர மொத்தம் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் மே 30 ஆம் தேதி மாணவர்கள் தேர்வு நடைபெறும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர மொத்தம் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் மே 30 ஆம் தேதி மாணவர்கள் தேர்வு நடைபெறும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வந்தது. https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள பக்கத்தில்  விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதவிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.

இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களை இலவசமாகச் சேர்க்க விண்ணப்பிக்க மே 25 கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை 2017-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022-2023-ம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.10 லட்சம் இடங்களில் சேர, ஆன்லைனில் பெற்றோர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

அதன்படி மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.  RTE சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர மொத்தம் 1,42,175 பேர் விண்ணப்பித்துள்ளனர். 1.10 லட்சம் இடங்களில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்த பெற்றோர்கள் முன்னிலையில், குலுக்கல் முறை தேர்வு மே 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!