மோசமான சாலையால் ஊருக்குள் வராத ஆம்புலன்ஸ்..! பாம்பு கடித்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு..!

By Manikandan S R S  |  First Published Oct 20, 2019, 1:57 PM IST

திருவாரூர் அருகே மோசமான சாலையில் ஆம்புலன்ஸ் வர முடியாததால் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பாம்பு கடித்த பெண் உயிரிழந்துள்ளார்.


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் மாலா. வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று மாலாவை தீண்டி இருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த மாலா மயங்கி விழுந்திருக்கிறார். அவரை உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். அதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளனர். பாதி தூரம் வந்த ஆம்புலன்ஸ் சாலை வசதி சரியில்லாமல் ஊருக்குள் வரமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

நீடாமங்கலத்தில் இருந்து வரதராஜபெருமாள் கட்டளை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலை தோண்டப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சீர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலை இன்னமும் சரி செய்யப்படவில்லை என்று அந்த பகுதியினர் கூறுகின்றனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் ஊருக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 

இதையடுத்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாலாவை உறவினர்களும் அந்த பகுதியினரும் தூக்கி சென்றுள்ளனர். அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.

முறையான சாலை வசதி இல்லாத காரணத்தினால் தான் ஆம்புலன்ஸ் ஊருக்குள் வர முடியாமல் இருந்திருக்கிறது. ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சரியான நேரத்திற்கு மாலாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கலாம். அதன்மூலம் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் இனியும் தாமதப்படுத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று மக்கள் எச்சரித்துள்ளனர்.

முறையான சாலை வசதி இல்லாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!