மாமன்னர் ராஜராஜ சோழனின் 1034 வது சதய விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூவேந்தர்களுள் ஒருவராக திகழ்ந்து சோழ சாம்ராஜ்யத்தை ஆட்சிபுரிந்தவர் பேரரசன் ராஜராஜ சோழன். உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது தான். தமிழகத்தின் பொற்காலம் என ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல்கடந்து புலிக்கொடி நாட்டிய பெருமை உடையவர் என்று ராஜராஜ சோழன் புகழப்படுகிறார்.
undefined
இவ்வளவு பெருமைகள் கொண்ட ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழாவும், அவர் மாமன்னராக முடிசூட்டிய நாளும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நாள் அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் ராஜராஜ சோழனின் சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சிகள் மங்கள இசையுடன் நேற்று துவங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான யானை மீது திருமுறை வீதி உலா, சிவனடியார்கள் தேவார பாடலை பாடி வீதி உலா ஆகியவை தஞ்சையில் இருக்கும் நான்கு ராஜ வீதிகள் வழியாக இன்று நடைபெற்றது. தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கவியரங்கம், கருத்தரங்கம், திருமுறை அரங்கம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
அரசு சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உயிருக்கு போராடிய நல்லபாம்பிற்கு உதவிய பொதுமக்கள்..! கால்நடை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை..!