ராமநாதபுரத்தில் பாஜக ஜெயிக்கக் கூடாது..! கூட்டணியை மண்டைக் காயவைக்கும் தமாகா!

By Asianet TamilFirst Published Mar 26, 2019, 7:08 AM IST
Highlights

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜகவுக்கு எதிராக கூட்டணி கட்சியான தமாகாவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் வாட்ஸ்அப் பேச்சு கூட்டணி கட்சியினரை மண்டைக் காய வைத்துள்ளது.  
 

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் நவாஸ் கனி களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன் அலி பேசுவது போன்ற 'ஆடியோ' ஒன்று வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது. அதில் கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளர் தோற்க வேண்டும் என்று ஹசன் அலி பேசியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வாட்ஸ்அப்பில் ஆடியோவில், “பாஜக் கூட்டணியில் சேர வேண்டாம் என்று என்று தலைவர் வாசனிடம் சொன்னேன். ஆனால். அவர் கேட்கவில்லை. இனி ஆண்டவன்தான் காப்பற்ற வேண்டும். ராமநாதபுரத்தில் பாஜக வெற்றி பெற்றால், அது எனக்கு ஏற்பட்ட அவமானமாக நினைப்பேன். மோடிக்கு எதிராக யார் அழைத்தாலும் பிரசாரத்திற்குப் போவேன். இத்தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் தோல்வி அடைந்தால் அது நாடு முழுவதும் பேசப்படும். 
தமாகாவிலிருந்து என்னை நீக்கினாலும் கவலையில்லை. இந்தத் தேர்தலில் சிறுபான்மையின ஓட்டுகளை ஒருங்கிணைத்து மோடிக்கு எதிராகப் பிரசாரம் செய்வேன். ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவேன். என்னை யாரும் பிரசாரத்திற்கு அழைக்காவிட்டாலும், தனிப்பட்ட முறையில் எதையாவது செய்வேன்” என்று தெரிவித்துள்ளார். 
ராமநாதபுரத்தில் வேகமாகப் பரவிவரும் இந்த வாட்ஸ்அப் செய்தியால் கூட்டணி கட்சியான அதிமுக - பாஜகவினர் கலக்கமடைந்துள்ளார்கள். கூட்டணியைக் கட்சியை சேர்ந்தவரே ஒருவர் இப்படி பேசியிருப்பது அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசன் அலி ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக 2006-ல் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!