ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்!

By Manikanda Prabu  |  First Published Mar 26, 2024, 4:09 PM IST

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்


அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அக்கட்சியில் ஒற்றை தலைமையாக உருவான எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினார். அடுத்தடுத்து நடைபெற்ற சட்டப் போராட்டங்கள் எதுவும் ஓபிஎஸ்சுக்கு கை கொடுக்காத  நிலையில், கட்சியும், சின்னமும், பெயரும் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது.

இந்த நிலையில், நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. முன்னதாக, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.

Latest Videos

இதனால், பாஜக தனது தலைமையில் தனியாக ஒரு கூட்டணியை தமிழ்நாட்டில் அமைத்துள்ளது. அக்கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு (ஓபிஎஸ் அணி) ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாகவும், சுயேச்சை சின்னத்தில் அவர் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மட்டும் இதுவரை மேலும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

வெப்ப அலை எச்சரிக்கை: வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

மதுரை மேளக்கிழார் பட்டி பகுதியைச் சேர்ந்த ஒச்சா தேவர் என்பவரது மகன் ஓ.பன்னீர்செல்வம் என்பவர் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயருடைய 3 பேர் புதிதாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒய்யாரம் என்பவரின் மகன் பன்னீர்செல்வம், மதுரை வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் என்பவரின் மகன் பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் என்பவரது மகன் பன்னீர்செல்வம் ஆகிய 3 பேர் இன்று ஒரே நாளில் மட்டும் மனு தாக்கல் செய்தனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

click me!