ராமநாதபுரத்தில் முன்னே சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற ஒன்றாம் நம்பர் அரசு நகரப் பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்பாக சென்ற டிராக்டர் ஒன்று பேருந்துக்கு வழிவிடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் டிராக்டரை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி தலை கீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி அந்த பகுதியைச் சேர்ந்த மக்களோடு சேர்ந்து இடுபாடுகளுக்குள் சிக்கி இருந்த பொதுமக்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வட்டாட்சியர் பழனி தனது அரசு வாகனத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படுவோர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் முன்னேற்பாடுகள் செய்வதில் மும்மரம் காட்டியும் வருகின்றனர். விபத்து சம்பந்தமாக திருப்புல்லாணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.