யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போன்றது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்புவாள். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் சில பெண்களுக்கு சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனை உட்பட பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, அண்மைக்காலமாக பொதுமக்களிடையே இயற்கை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அது, பெண்களின் பிரசவத்திலும் எதிரொலித்து வருகிறது. அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம் மீது நம்பிக்கை இல்லாத சிலர், பிரசவம் உள்பட இயற்கை வழி மருத்துவத்தை நாடி வருகின்றனர்.
அலோபதி தவிர, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி (இயற்கை மருத்துவம்) என ஐந்து விதமான மருத்துவமுறைகளையும் மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்த மருத்துவப் படிப்புகளை படித்து இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருந்தால்தான் அவர்கள் மருத்துவர்கள். ஆனால், இதுபோன்று பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களை நாடாமல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்த்து, அதில் வழங்கப்படும் குறிப்புகளை கொண்டு தாங்களாகவே தங்களுக்கு மருத்துவம் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்டவைகளுக்கு இயற்கை முறையில் மருத்துவம் பார்த்தால் கூட பரவாயில்லை. அதிலும், கூட எதற்காக அந்த நோய்கள் வருகிறது என்று சோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாக இருக்கும் நிலையில், பல்வேறு கடுமையான நோய்களுக்கும் சமூக வலைதளத்தை பார்த்து தாங்களாகவே மருத்துவம் செய்து கொள்ளும் அவலம் நிலவி வருகிறது.
குறிப்பாக, இயற்கை முறையில் வீட்டிலேயே அதுவும் யூடியூப் பார்த்து பிரசவம் பார்க்கும் முறை அதிகரித்து வருகிறது. ஒரு சிலருக்கு இதுபோன்ற மருத்துவ முறைகள் வெற்றி அடைந்தாலும், பெரும்பாலானோருக்கு தோல்வியிலேயே முடிகிறது. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. பிரசவத்தின்போது ஏற்படும் ரத்தபோக்கு, நஞ்சுக் கொடி சுற்றிக் கொள்வது உள்ளிட்டவைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.10 நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
அந்த வகையில், யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தனது மனைவி லோகநாயகிக்கு அவரது கணவர் மாதேஷ் இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பதாக கூறி இருக்கிறார். அதன்படி, மருத்துவமனை செல்லாமல் பிரசவம் பார்த்ததால் லோகநாயகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள போதிலும், பலரும் அதனை கண்டுகொள்ளாமல் இயற்கை பேர்வழிகள் என்ற பெயரில் தங்களது இஷ்டத்துக்கு செயல்படுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த காலத்திலெல்லாம் மருத்துவமனைகள் இருந்தனவா? அப்போதெல்லாம் பேறுகாலம் நடைபெறவில்லையா? என்ற கேள்விகள் எழலாம். ஆனால், அந்த காலத்துக்கும், இந்த காலத்துக்கும் உணவு முறை உட்பட பல்வேறு விஷயங்களில் வித்தியாசங்கள் உள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.