ஓசூர் அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும்- சரக்கு லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓசூர் அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும்- சரக்கு லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று 34 பயணிகளுடன் அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்திற்கு இன்று அதிகாலை 3.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வந்த சரக்கு லாரியின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்தது. அப்போது, லாரி நிலை தடுமாறி தடுப்புச் சுவரை தாண்டி எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியுள்ளது.
இதில் அரசுப் பேருந்து மற்றும் கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணி ஒருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.