கிருஷ்ணகிரி மாவட்ட முதியவருக்கு கொரோனா.. ஆனாலும் பச்சை மண்டலமாகவே நீடிப்பது ஏன்..? பீலா ராஜேஷ் விளக்கம்

By karthikeyan VFirst Published May 3, 2020, 3:04 PM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டை சேர்ந்த முதியவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டும் கூட, கிருஷ்ணகிரி கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக நீடிப்பது ஏன் என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 2757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ள நிலையில், 1341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட அதிகமானோர் குணமடைவது தமிழ்நாட்டிற்கு ஆறுதல். 

நேற்று அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதனால் 231 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது. கடந்த சில தினங்களாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் தான் இருந்தது. ஆனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள், வியாபார்கள் என சொந்த ஊருக்கு திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவருவதால், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் தமிழ்நாட்டில் கொரோனாவே இல்லாத ஒரே மாவட்டமாக பச்சை மண்டலமாக நீடிக்கிறது. ஆந்திராவிலிருந்து திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கிருஷ்ணகிரி பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட மாவட்ட வாரியான கொரோனா பட்டியலில், கிருஷ்ணகிரியில் பாதிப்பு பூஜ்ஜியம் என்றிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முதியவருக்கு கொரோனா இருந்தும் கூட எப்படி கிருஷ்ணகிரி பச்சை மண்டலத்தில் நீடிக்கிறது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. 

இதையடுத்து அதுகுறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், அந்த முதியவர் ஆந்திராவிலிருந்து வந்தபோது சேலம் சோதனைச்சாவடிலேயே அவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு அப்படியே சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதனால் அவரது பாதிப்பு, சேலம் மாவட்ட எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது. அதனால் கிருஷ்ணகிரி தொடர்ந்து கொரோன இல்லாத மாவட்டமாக பச்சை மண்டலத்தில் நீடிக்கிறது என்று பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து வந்த 13 பேர் கிருஷ்ணகிரி எல்லையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதியானால் கிருஷ்ணகிரி கணக்கை தொடங்கும். 
 

click me!